சனி, ஜனவரி 25, 2014

அய்யம்பேட்டை டீ காபி பிஸ்கட்!





           கும்பகோணம் தஞ்சை சாலையில் இருக்கும் அய்யம்பேட்டையில் இருக்கிறது 'இத்தாலியன் பேக்கரி'.  தஞ்சை போகும் வழியில் எதேச்சையாக காரை நிறுத்தி பப்ஸ் வாங்க... "வேற என்ன இருக்கு என்றேன்?".
"எங்க கடை ஸ்பெஷல் 'டீ காபி பிஸ்கட்'  இருக்கு ட்ரை பண்ணி பாருங்க சார் " என்றார் அந்தக் கடையில் இருந்தவர்.

நீட்டு நீட்டாய் இருந்த  பிஸ்கட்டை கொடுத்தார்.

வித்தியாசமான முறையில் மூன்று கைவிரல் சைசில், வரி வரியாக  மொறு மொறு சுவையுடன் இருந்தது  பிஸ்கட். 1957ல் அய்யாச்சாமியால் தொடங்கப்பட்ட இத்தாலியன் பேக்கரியை,  தற்போது மூன்றாவது தலைமுறை நடத்தி வருகிறது.  "எங்களது தாத்தாதான் இந்த பிஸ்கட்டை கண்டுபிடித்தார். இந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு இந்த பிஸ்கட்டை பற்றித் தெரியும்" என்றார் கடையில் இருந்த பேரன்.

அய்யம்பேட்டை 'டீ காபி பிஸ்கட்டை' இவர்கள் மொத்தமாய் செய்து விற்பதில்லை. அன்னனைக்கு செய்துதான் விற்கிறார்கள். 'இது எப்படி தெரியும்' என்று கேட்கிறீர்களா...? 
 
இரவு பத்தரை மணிக்கு திரும்பி வரும்போது கடை திறந்து இருந்தது.  காரை நிறுத்தி பிஸ்கட் கேட்கும் போதுதான் அவர் சொன்னார்  "சொல்லியிருந்தா எடுத்து வச்சிருப்போமே சார்" என்று.

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கர கர மொறு மொறு கிரவுன்ச் !'அய்யம்பேட்டை டீ காபி பிஸ்கட்' அறிமுகப்படுத்தப்படவேண்டிய ஒன்று!.

அந்தப் பக்கம் போனால் வாங்கி சாப்பிட்டுப்பாருங்க!.
கால் கிலோ ரூ.40/-

புதன், ஜனவரி 22, 2014

புத்தகக் காட்சியில் இளைத்துப் போகும் பர்ஸூகள்!




                    என்னை போன்ற கிராமத்து ஆசாமிகள், பொங்கல் கொண்டாட கிராமத்துக்கு வண்டி கட்டிவிடுவதால்,  புத்தகக் காட்சிக்கு பந்தி முடியும் நேரத்தில்தான் உள்ளே நுழைய முடிகிறது. ஒரு வாரம் முழுவதும் பொங்கல் விடுமுறையை கிராமத்திலேயே கழிப்பதால், சென்னை புத்தகக் காட்சியின் முக்கிய நிகழ்வுகளை நிறையவே தொலைக்க வேண்டியதாக இருக்கிறது.

பபாசியோடு தினமணிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அரங்கத்திலிருந்து ஆர்ச் வரை, (தினமணிக்காக)  முடிவுசெய்துவிட்டு  சரியாக புத்தகக் காட்சியின் உச்சத்தில் கிராமத்திற்கு பொங்கல் கொண்டாட செல்வது என்பது சற்று வேதனையான ஒன்றுதான்.

பொங்கல் விடுமுறையை உத்தேசித்தே  சென்னை புத்தகக் காட்சி நடத்தப்படுவதால், நமக்கு பொங்கலுக்கும் ஆசை புத்தகத்திற்கும் ஆசையாகிவிடுகிறது?!.  தமிழ் புத்தகம் வாசிப்பவர்கள்தான் தை பொங்கலை கொண்டாட கிராமத்திற்கு போகிறார்கள் என்பது எனது அவதானிப்பு. (வேற தேதிக்கு மாத்தப்படாதா.....?)

இம் முறை புத்தகக் காட்சிக்கு உள்ளே நுழையும் போது, இரவு மணி எட்டேகால்.  சென்னையின் புற நகரிலிருந்து அதன் மையத்திற்கு பீக் அவரில் வரவேண்டும் என்றால், எத்தகைய சிரமமான செவ்வாய்கிரகப் பயணம் என்பதை அனுபவித்தால் மட்டுமே புரியும்.  மாலை ஆறு மணிக்கு குடும்பத்தோடு புறப்பட்ட நான் (இல்லெனா குடும்பம் கோவிச்சுக்கும்) இரண்டேகால் மணி நேரம் ஜனவாச ஊர்வலமாக பவனி வந்தே  புத்தகக் காட்சியை அடைந்தேன்.

கிடைத்த முக்கால் மணி நேரத்தில் என்ன வாங்கி விடமுடியும்?. 736 அரங்குகளை பார்த்து முடிக்கவே அர்த்த ஜாமம் ஆகிவிடும். இதில் பிடித்த அரங்குகளை உள்ளே நுழைந்து, புத்தகங்களை பார்த்து (முக்கியமாக விலையை) வாங்கவேண்டும் என்றால் விடிந்துவிடும்!.

போகட்டும்...எனது பிரஸ்தாபத்தை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

சரி......வாங்கினதை சொல்லலனா நல்லா இருக்காது?

1 'மீதமிருக்கும் வாழ்வு'.
   -என்.ஸ்ரீராம்.
   பாதரசம் வெளியீடு,சென்னை.
   பக்கம் 78.  விலை ரூ80/-

2  'விமலாதித்த மாமல்லன் கதைகள்'
  -விமலாதித்த மாமல்லன்
     உயிர்மை பதிப்பகம், சென்னை.
     பக்கம் 312. விலை ரூ180/-

3 'தப்புகிறவன் குறித்த பாடல்'
   -லிபி ஆரண்யா.
   உயிர் எழுத்து, திருச்சி.
    பக்கம் 56. விலை ரூ40/-

4 'கவிதையின் கால்தடங்கள்'
    50 கவிஞர்களின்  400 கவிதைகள்
   தொகுப்பு   செல்வராஜ், ஜெகதீசன்.
    அகநாழிகை பதிப்பகம், சென்னை.
    பக்கம் 268. விலை ரூ.230/-

5 'வயது வந்தவர்களுக்கு மட்டும்'
    -கி.ராஜநாராயணன்.
    அகரம், (அன்னம்)  தஞ்சாவூர். .
   பக்கம் 248.  விலை ரூ150/-

6 'மார்கோ போலோ பயணக்குறிப்புகள்.'
    -தமிழில் பொன் சின்னத்தம்பி முருகேசன்.
    அகல், சென்னை.
   பக்கம் 312. விலை ரூ.240/-

7  'டேவிட் ஒகில்வி' (
ஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த அனுபவங்கள்)
    கிழக்கு பதிப்பகம். விலை ரூ.125/-


8  அந்தமான் சிறை  அல்லது இருட்டு உலகம்.
     - என்.சொக்கன்.
     கிழக்கு  பதிப்பகம். விலை ரூ.100/-
   

9 லிண்ட்சே லோகன் w/o மாரியப்பன். (மின்னல் கதைகள்)
   - வா. மணிகண்டன்.
     யாவரும்.காம்.  விலை ரூ.90/

10  அன்ன பட்சி  
      - தேனம்மை லெக்ஷ்மணன்
       அகநாழிகை. விலை ரூ.80/-


 11  தஞ்சாவூர் - பெரிய கோவிலின் 1001-வது ஆண்டு சிறப்பு வெளியீடு.
          -டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன்.
   அன்னம், தஞ்சாவூர்.
    பக்கம் 384. விலை ரூ.400/-

12  காசி ஆனந்தன் நறுக்குகள்.

    காசி ஆனந்தன் குடில். விலை ரூ.100/-

13 சேதுக் கால்வாய் தமிழர்கால்வாய்.
      காந்தளகம்.

14 திருமுறைத் திருமணம் / சைவத் திருமண தமிழ் மந்திரங்கள்.


புத்தக விமர்சனம் பிரிதொரு நாளில்.

-தோழன் மபா.

ஞாயிறு, ஜனவரி 12, 2014

பள்ளியில் போதிப்போம்!.


       உலக அளவில் அதிகம் சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.  பராமரிப்பு இல்லாத சாலைகள், சாலை விதிகளைப் பற்றிய அடிப்படை அறிவின்மை, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதில் நெகிழ்வுத் தன்மை கொண்ட சட்ட முறைகள் என்று என்னற்ற குறைபாடுகளை கூறலாம்.

மக்கள்தொகை பெருக்கம் ஒருபுறம் இருந்தாலும், வாகனங்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள்  இல்லாமையும் ஒரு காரணமாக இருக்கிறது.  

இதில் தமிழகத்தின் நிலைதான் மிகுந்த கவலைக்கிடமாக இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

2003ஆம் ஆண்டு நாட்டிலேயே மிக அதிகபட்சமாக தமிழகத்தில் 51,000 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. அதற்கு பின் 2012ல் அதிகபட்சமாக 68,000 விபத்துக்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் ஒரு மணிநேரத்திற்கு எட்டு விபத்துக்கள் நடைபெறுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்தில் 16,175 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு நாளைக்கு சராசரியாக தமிழகத்தில் சாலை விபத்து மூலம் 44 பேர் உயிரிழக்கின்றனர். இவற்றில் சென்னையில்தான் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதிக சாலை விபத்துக்கள் நடக்கும் இந்திய பெரு நகரங்களில் சென்னை முதலிடத்திலும் (9663), தில்லி இரண்டாவது இடத்திலும் (5865), பெங்களூரு மூன்றாவது இடத்திலும்(5508) உள்ளன.

பொறுமையின்மைதான் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம். சாலையை கண்ட இடத்தில் கடப்பது, முன் எச்சரிக்கை இன்றி வாகனத்தை நிறுத்துவது,  வாகனங்களில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றுவது, தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் ஒளி உமிழும் விளக்குகளை பயன்படுத்துவது, முறையான சமிக்ஞை தெரிவிக்காமல், வாகனத்தை திருப்புவது, சாலைகளில் சாலை விதிகளைப் பற்றிய குறியீடு இல்லாமை,  அதிக ஒலி எழுப்பி இதர வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் அலறவிடுவது, தேவையற்ற யூ திருப்பங்கள், பள்ளி கல்லூரிகள் திறக்கும் அல்லது மூடும் நேரங்களில் கனரக வாகனங்களை இயக்குவது, வாகனங்களின் முன் உள்ள விளக்குகளில் ஒளி மறைப்பான் இல்லாமல் இயக்குவது, வாகனங்களின் பின்புறத்தில் ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் இருப்பது, செப்பனிடப்படாத சாலைகள்,  இடது புறத்தில் முந்திச் செல்லுவது, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் மற்றும்  வீடுகள் உள்ள சிறிய தெருக்களில் எத்தகைய வேகத்தில் செல்லவேண்டும் என்ற அறிவிப்பு பலகை இல்லாதது,   வேகத்தடை பற்றிய அறிவிப்பு இல்லாமை, வாகனங்களின் முறையற்ற பராமரிப்பு, அதிவேகம், வண்டி ஓட்டும் போது கை பேசியை பயன்படுத்துவது, சாலையை கடக்கும் போது கை பேசியில் பேசிக் கொண்டே சாலையை கடப்பது என்று விபத்திற்கான காரணங்களை பெரும் பட்டியலே போடலாம்.

தமிழகத்தில் சாலையில் விபத்து நடந்த இடம் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு, அங்கு விபத்து நடைபெற்ற சுவடே இல்லாமல் செய்து விடுகின்றனர்.  இது மிகவும் தவறானது, விபத்து நடந்த இடத்தில்,  ஒரு அறிவிப்பு பலகையை குறைந்தது ஒரு மாதத்திற்காகவாவது வைக்க வேண்டும். அப்போதுதான் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வும், விபத்து பற்றிய அச்சமும் ஏற்படும்.

சாலை விபத்துகள் பற்றிய விழிப்புணர்வே சாலை விபத்துகளை தடுக்க ஒரு முக்கிய காரணியாக அமையும். இதற்கான ஒரே தீர்வு, சாலை விதிகளைப் பற்றிய விழிப்புணர்வை, பள்ளி பருவத்திலேயே மாணவர்களிடம் தொடங்கிவிட வேண்டும். பாதுகாப்பான பயணம், சாலை விதிகளை முறையாக பின்பற்றுவது, சாலை பாதுகாப்பில் சட்ட முறைகள், வாகன பராமரிப்பு, பாதுகாப்பான வேகம், சாலைகளை பயன்படுத்தும் முறை, பயணிகளின் பாதுகாப்பு,  முதலுதவி, மனித உயிர்களின் முக்கியத்துவம் என்று நாம் பாடத் திட்டத்தில் சேர்க்க நிறையவே விஷயங்கள் இருக்கின்றன.
இத்தகைய பாடத்திட்டங்களை நாம், ஆறு அல்லது ஏழாம் வகுப்பிலேயே தொடங்க வேண்டும். வாரத்தில் இரண்டு வகுப்புகளையாவது இதற்கென நாம் ஒதுக்க வேண்டும். இதில் தேர்வுகளையும் வைக்கவேண்டும். இந்த வகுப்புகளைத் தாண்டி வரும் மாணவர்கள்தானே பிற்காலத்தில் வாகன ஓட்டிகளாவும், வாகனங்களை பயன்படுத்துபவராகவும் வருகின்றனர்.
நற்சிந்தனை, நல்லொழுக்கம், உறவின் மேன்மை, உயிரின் உன்னதம் போன்றவற்றை நாம் கல்வியின் மூலமாகத்தான் மாணவச் சமுதாயத்திடம் விதைக்க முடியும்.

இந்த விதைகளே விருட்சமாக வளர்ந்து, விபத்தில்லாத ஒரு உலகை படைக்க உதவும். நொடியில் முடியும் மனித வாழ்க்கையை நீடித்து இருக்க,  இத்தகைய முயற்சிகள் பலன் தரும். சாலை விதிகளை பள்ளிகளில் போதித்தால் மட்டுமே, விபத்தில்லாத  நாளைய உலகை நாம் படைக்க முடியும்.

First Published : 07 January 2014 01:17 AM IST
தினமணியில் வந்த எனது கட்டுரை.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...