ஞாயிறு, டிசம்பர் 26, 2010

ஒரு பிரசவ வேதனை !

ஞாயிறுகளில் வெளிவரும் நாளிதழ்களின் இலவச இணைப்புகளை நேரம் கிடைக்கும்போது வாசித்துவிடுவேன். அதில் வரும் நிறைய விஷயங்கள் எப்போதும் சுவராஸ்யம் மிக்கதாக இருக்கும். அதுவும் குறிப்பாக 'வாசக அனுபவங்கள்' நமக்கு ஏதோ ஒரு  வகையில் பயன் உள்ளதாக இருக்கும்.

இந்தவாரம் வந்த தினத்தந்தியின் குடும்பமலரில்  'நெகிழ வைக்கும் நிஜங்கள்'  பகுதியில் வந்திருந்த செய்தி என்னை கவர்ந்ததால் உங்களுக்காக தந்திருகின்றேன்.

நூலகங்களில் நாளிதழ்களும், வாரயிதழ்களும் மேஜை மீது எப்போதும் சிதறியே கிடக்கும். படித்துவிட்டு அப்படியே போட்டுவிட்டு போய்விடுவர். படிக்க வருபவர்கள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் நடந்துக்கொள்வர்.

 ஒரு  70 வயது மதிக்கத்தக்க  முதியவர்  ஒருவர் மேஜையில் கிடந்த  நாளிதழ்களை முறையாக அடிக்கிவைத்துவிட்டு, புத்தங்களை எப்படி பராமரிக்கவேண்டும் என்று கூறி அங்கு வருபவர்களிடம் துண்டு பிரசுரம் ஒன்றை விநியோகம் செய்துள்ளார்.

அதில்...சில வரிகள்:


பிள்ளை பேறுபோல் எந்தன் பிறப்பு
பொன்போல் கையாளுங்கள்!
பக்கங்கள் எனது அங்கங்கள்
மென்மையாக புரட்டுங்கள்!
அச்சிட்ட அத்தனையும் வடித்திட்ட கருத்துகள்'
இச்சையுடன் படித்து இன்புறுங்கள்!
பளிச்சிடும் படங்கள் எனக்கு மெருகூட்டும்
அலங்காரம் பார்த்து ரசித்து பரவசப்படுங்கள்....!

 அவரின் தன்னலமற்ற தொண்டு என்னை கவர்ந்ததால்தான் இந்த பதிவு.

சனி, டிசம்பர் 25, 2010

மீண்டும் வரும் அதே ஞாயறு

"26 டிசம்பர் நாளையும் வருகிறது...!"


மாங்ரோ காடுகள்


கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வருகிறது அந்த கருப்பு ஞாயறு.  உலக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி, உறவுகளை சிதைத்து, உலகின் பல நாடுகளின் மக்களை கபலீகரம் செய்த அந்த கருப்பு 26  ஞாயற்றுக் கிழமை நாளை மீண்டும் வருகிறது. ஆம் நளை டிசம்பர் 26.

கொத்துகொத்தாய் மடிந்தவர்கள்
26/12/2004 அது ஒரு மோசமான ஞாயிறு.   நாங்கள் கோடம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 2ம் தளத்தில் வசித்துவந்தோம்.  விடியற்காலை 6 மணி இருக்கும், ஒரு முக்கியமான விளம்பரம் எப்படி வந்திருக்கிறது என்ற ஆவலில் வாசலில் கிடந்த தினமணி நாளிதழை கையில் எடுத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தேன்.   சில வினாடிகள்தான் கடந்திருக்கும், நான் அமர்ந்திருக்கும் நாற்காலி சில வினாடிகள் ஆடியது.  எனக்கு என்னத் தோன்றியது என்றால், 'நமது உடல்நிலை வர வர மோசமாகிவிட்டது.   பலகீனத்தால்தான் இப்படி உடல் நடுங்குகிறது...' என்று நினைக்கும் அந்த நொடிகளில் மீண்டும் நாற்காலி குளுங்கியது...!

இந்த முறை சற்று பலமாகவே.  அதற்குள்  கீழியிருந்து  சத்தம் கேட்டது. " கீழே.... ஓடுங்க...! ஓடுங்க... பூகம்பம்" என்று அலறல் சத்தம் கேட்டது.  எங்கும் ஒரே அமளிதுமளி. குடியிருப்பே பரபரப்பாக  கீழே இறங்கிக்கொண்டு இருந்தது. கட்டிலில் கிடந்த எனது மகளை தூக்கிக்கொண்டு, பைக் சாவி கூடவே பர்ஸையும் எடுத்துக் கொண்டு மனைவியோடு கிழே இறங்கி ஓடினால், மொத்த குடியிறுப்பும் 'கோட்டுவாயோடு' பிளாட்டையே பீதியோடு பார்த்துக் கொண்டு இருந்தது.

சில மணித் துளிகளில்... 'சென்னை முழுவதும் வீடுகள் குளுங்கின' என்ற செய்தி காட்டுத் தீ போன்று பரவியது.  நாங்கள் பல்லுவிலக்கக் கூட... வீட்டுக்குள் செல்ல தயங்கி 1 மணி நேரம் வெளியிலேயே நின்றுக் கொண்டு இருந்தோம். அதுவரைக்கும் உன்மையாக என்ன நடந்தது என்ற விவரம் கூட தெரியவில்லை.

அதற்குள் எங்கள் அண்ணன் தாம்பரத்தில் இருந்து, தொலைபேசி...எங்களை அவரது வீட்டிற்கு வரச் செய்துவிட்டார்.

பிறகுதான் தெரிந்தது, ஜாவா சுமத்திரா தீவுகளில் ஏற்பட்ட பூகம்பத்தால் இந்துமா கடலில்  சுனாமி  ஏறுபட்டுள்ளது என்று. அது வரையில் 'சுனாமி' என்றால் என்னவென்றே நமக்குத் தெரியாது.  அந்த பெயரும் புதிது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------
சுனாமி ஜப்பானிய வார்த்தை.

சுனாமியின் போது சென்னை மெரீனா கடற்கரை
சுனாமி என்பது ஜப்பானிய வார்த்தையாகும். இது இரண்டு எழுத்து வார்த்தையாகும். முதல் எழுத்தான சு- துறைமுகத்தையும் னாமி - என்பது அலையையும் குறிக்கிறது. கடலுக்கு அடியில் தரைப்பகுதிகளில் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு போன்ற கடுமையான தாக்குதலால் கடல் பாதிக்கப்படும் சமயங்களில் மிக ஆக்ரோஷமான கடல் அலைகள் உருவாகின்றன. இது மட்டுமின்றி கடலுக்கு அடியில் தரைப்பகுதிகளில் நிலச்சரிவும் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இத்தகைய நிலச்சரிவுகள் மற்றும் நிலநடுக்கங்கள் போன்றவை பெருமளவில் நிகழும் சமயங்களில் கடல் நீர் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. இதன் காரணமாக கடலின் தரைப்பகுதிகளில் இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு அதன் காரணமாக உருவாகும் அலைகள் கரையை நோக்கி கடலுக்கு அடியிலேயே மிக வேகமாக பயணித்து கரையை அடைந்ததும் மோதிச் சிதறுகின்றன. இவ்வாறு சிதறும் போது கரைப்பகுதியில் இருப்பவை அனைத்தையும் அழைத்துச் செல்லுகின்றன. இந்தத் தக்குதலே சுனாமி என்று அழைக்கப்படுகிறது

-----------------------------------------------------------------------------------------------------------------------------

சுனாமி இந்துமகாச் சமூத்திரத்தில்  உள்ள இந்தோனேஷியா, புங்கட் தீவுகள், அந்தமான், இலங்கை, இந்தியா உட்பட   அனைத்து நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டிவிட்டது.  இங்கு தமிழகத்தில்  சென்னையில் மெரீனா, நொச்சிக் குப்பம், ஸ்ரீனிவாச புரம், பட்டினப்பாக்கம், மகபலிபுரம், கடலூர் மாவட்டதில், கிள்ளை, பரங்கிப்பேட்டை, புதுக்குப்பம் மற்றும் புதுச்சேரி,  நாகை மாவட்டத்தில் பழயாறு, புதுப்பட்டிணம், பூம்புகார், கொட்டாயமேடு, மடவாமேடு, கீச்சாங்க்குப்பம், வேளாங்கன்னி, நாகர்கோவில் கடற் பகுதி என்று தமிழகத்தையே ஒரு புரட்டு புரட்டியது ஆழிப் பேரலை.


இதில் அதிகப் பாதிப்பு நாகை மாவட்டத்திற்குதான். அதுவும் வேளங்கன்னியில் படுபயங்கரம். அங்கு பொதுவாகவே எப்பதும் கூட்டம் இருக்கும்.  அதுவும் கிருஸ்துமஸ் முடிந்த  ஞாயறு என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது.  ஒரு பத்திரிகையின் நிருபர் தனது குழந்தைகளுக்கு மொட்டை அடித்துவிட்டு தனது குடும்பத்தோடு கடற்கரையில் இறங்கி, தண்ணீரை மொண்டு தனது மகன்களின் தலையில் தெளிக்கும் போது "ஹொ" வென பாய்ந்து வந்த ஆழிப் பேரலை அவரது இரு மகன்கள், மனைவி, மாமியார் என்று மொத்த குடுப்பத்தையும் சுருட்டிக் கொண்டு போனது. அதில் தப்பிய  அவர் இன்றும் நடை பினமாக வாழ்த்துக் கொண்டு இருக்கிறார்.  இப்படி குடும்பம் குடும்பமாக காவு வாங்கியது சுனாமி. 

அந்தமான் போன்ற தீவுகளில் மக்கள் ஓட... ஓட... அவர்களுக்கு முன்பாக  கடல் நீர் 'குமிழ்' விட்டு, 'குமிழ்' விட்டு, ஊரையும் மக்களையும் சூழ்ந்துள்ளது.  அங்கும் பாதிப்பு மிக அதிகம்.  இப்படி சென்ற இடமெல்லாம் தனது கொடிய கரங்களால் மக்களை கொன்று குவித்தது ஆழிப்பேரலை.

புன்னைவனக் காடுகள்

இதில் அதிசயமான ஒரு உண்மை என்னவென்றால், சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் வனப்பகுதியை சுனாமி தாக்கவில்லை என்பதுதான்.   புன்னைவனக் காடுகள் என்றும் மாங்க்ரோ காடுகள் என்று கூறக் கூடிய மரங்கள், கடற்கரை முழுவதும் அந்தப் பகுதியில் ஏக்கரா கணக்கில் இருப்பதுதான். அது மிகச் சிறந்த ஒரு பாதுகாப்பு அரணாக இருந்து அந்த பகுதியை காத்துள்ளது.  இத்தகைய புன்னைவனக் காடுகள் கடற்கரை ஓரங்களில் அடர்த்தியாக வளர்ந்து கடல் அரிப்பு  மற்றும் கடல் அலைகளை ஊருக்குள் வரவிடாமல் செய்துவிடுகிறது.  அதனால் மிகப் பெரிய ஆழிப் பேரலைகலிருந்து இந்த பகுதி முற்றிலுமாக பாதுகாக்கப் பட்டுள்ளது.  இந்தியாவில் கல்கத்தா மற்றும் தமிழத்தில்தான் இந்தகைய மாங்க்ரோ காடுகள் இருக்கின்றன.

இயற்கையோடு இணைந்த வாழ்வு.

இப்படி இயற்கையே நமக்கு பல வழிகளில் நாம் பாதுகப்பாக வாழ வழிசெய்திருக்கின்றன். அத்தகைய பாதுகாப்புகளை நாம் கண்டுணர்ந்து, அதன் மரபுத்தன்மை கெடாமல் நாம் அதனை பாதுகாக்க வேண்டும். கடற்கரை ஓரங்களில் மனித குடியிருப்புகளை அமைப்பதை தவிர்த்து, கடல் ஓரங்களில் சவுக்கு, புன்னை  போன்ற மரங்களை வளர்ப்பதன் மூலம் சுனாமி ஊருக்குள் வருவதை தவிர்க்கலாம், குறைந்தபட்சம் நாம் தப்பிப்பதற்காகவாவது நேரம் கிடைக்கும்.

அப்படி நம்மை பீதியில் ஆழ்த்திய 26 டிசம்பர் நாளையும் வருகிறது. இந்த துயர் மிகுந்த நாளில் தனது உறவுகளை இழந்த அந்த ஆத்மாக்களுக்கு தனது ஆழ்ந்த துயரங்களை இந்த கட்டுரையின் வாயிலாக  தமிழன் வீதி தெரிவித்துக் கொள்கிறது.

இனியாவது இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் நமக்கு நலம் உண்டு.



புதன், டிசம்பர் 15, 2010

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் புதிய ஆசிரியர். பிரபு சாவ்லா!




பிரபு சாவ்லா இந்தியாவின் குறிப்படத்தக்க அரசியல் புலனாய்வு  பத்திரிகையாளர்களில்  ஒருவர். ஆளும் ஆட்சியாளர்கள் கம் அரசியல்வாதிகளுக்கு   எப்போதும் சிம்ம சொப்பனமாக இருந்துவரும் பிரபு சாவ்லா தற்போது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தியா டுடே வாசர்களுக்கு நன்கு அறிமுகமான பிரபு சாவ்லா, இந்தியா டுடே மாநில மொழிகளில் வருவதற்கு பெரிதும் காரணமாக இருந்தார். அதுநாள் வரையில் வழவழப்பான தாளில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்தது, இவரின் முயற்சியால் பிராந்திய மொழிகளிலும் வரத் தொடங்கி பெரிதும் வரவேற்பைப் பெற்றுது.


டெக்கான் கிரானிகல் எடிட்டர் இன் சீப் ஆக இருந்த எம் ஜே அக்பர் இந்திய டுடே க்கு தாவுவதால், அங்கிருந்த   பிரபு சாவ்லா இந்தியன் எக்ஸ்பிரசுக்கு வருகிறார்.


இதற்கு முன்பே எண்பதுகளில் இந்தியன் எக்ஸ்பிரசில் ஆசிரியராக இருந்துள்ளார். அதோடு தினமணி நாளிதழுக்கும் ஆசிரியராக ஒரு வாரம் பணியாற்றிவுள்ளார் என்பதும்குறிப்படத்தக்கது.
1946 இல் பாகிஸ்தானில் உள்ள தேரா காசி கானில்  பிறந்தவர். தனது கூர்மையான எழுத்துகளால் அவப்போது அரசியல்வாதிகளைக் குத்திக்கொண்டு இருக்கும் பிரபு சாவ்லாவின் பேனா இன்னும் அதிக வேகத்துடன் தாக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம்.
 
இதில் கொஞ்சமமும் சளைத்தது அல்ல இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். அரசியல் புலனாய்வுச் செய்திகளுக்கு  எப்போதும் பேர்போனது இந்தியன் எக்ஸ்பிரஸ். அதன் துடிப்பு மிக்க விமர்சனங்களின்  வீச்சுகளை தாங்கமுடியாத இந்திராகாந்தி போன்ற அரசியல்வாதிகள் இந்தியன் எக்ஸ்பிரசுக்கு எதிராக நெருக்கடி நிலையை அமல்படுத்தி அதை தடுமாறச் செய்தனர். ஆனால் இன்றும் அதே போர்குனத்தோடு, ஆட்சியாளர்களுக்கு எதிராக வாளை சுற்றுகிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

குழப்பமான இந்த அரசியல் சூழ்நிலையில்  இந்தியன் எக்ஸ்பிரசுக்கு பிரபு சாவ்லாவின் வருகை நிச்சயம் இந்திய அரசியலை ஒரு கைப்பார்க்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.




திங்கள், நவம்பர் 15, 2010

இ-மெயில் சேவையை துவக்கியது பேஸ்புக்

சோஷியல் நெட்வொர்க் இணையதளங்களின் ஜாம்பவானாக திகழும் பேஸ்புக், விரைவில் இ-மெயில் சேவையை துவக்குகிறது. இது மைக்ரோசாப்ட, யாகூ, கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுக்கு கடும்போட்டியாக அமையும்

என்று நாளிதழ்கள் அவ்வப்போது செய்தி வெளியிட்ட வண்ணம் உள்ளன. ஆனால் இதுகுறித்த அறிவிப்பு பேஸ்புக் தரப்பிலிருந்து வரவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவின் சிலிக்கான வேலி பகுதியில் இருந்து வெளியாகும் தொழில்நுட்ப வலை இதழான டெக்கிரஞ்ச்சில், இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெப் பேஸ்டு இ-மெயில் சேவையை பேஸ்புக் துவக்க இருப்பதாகவும், இந்த மெயில் அட்பேஸ்புக்.காம் என்று முடியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கிற்கு, சர்வதேச அளவில் 500 மில்லியன் பயனாளர்கள் இருப்பதாகவும், மற்ற முன்னணி நிறுவன்ஙகளான கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் நிறுவனங்களை முறியடிக்கும் பொருட்டு இந்த சேவை‌ துவக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைன் டிராக்கிங் நிறுவனமான காம்ஸ்கோர் நிறுவனம், சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, கடந்த செப்டமபர் மாத நிலவரப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹாட்மெயிலுக்கு 361.7 மில்லியன் பயனாளர்களும், யாகூமெயிலுக்கு 273.1 மில்லியன் பயனாளர்களுகும், கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு 193.3 மில்லியன் பயனாளர்கள் இருப்பத‌ாகவும் தெரிவித்துள்ளது.



இதனடிப்படையில் பார்த்தால், பேஸ்புக்கிற்கு 500 மில்லியன் பயனாளர்கள் இருப்பதால், யாகூ, கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை எளிதில் பின்னுக்குத் தள்ளலாம் என்ற முடிவில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்கிரஞ்சில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : பேஸ்புக் நிறுவனம், இந்த திட்டத்தை ரகசியமாக வைத்திருந்ததாகவும், இந்த திட்டத்தி்ற்கு "புராஜெக்‌ட் டைட்டன்" என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், சுருங்கக் கூறினால், "ஜிமெயில் கில்லர்" என்று பொருள் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-மெயில் சேவையை துவக்குவதற்கான பணிகள் ஆரம்பக்கட்ட நிலையிலேயே உள்ளதாகவும், விரைவில் இ-மெயில் சேவையை துவங்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி தமிழ் cnn !

திங்கள், அக்டோபர் 25, 2010

இப்போதெல்லாம் யாரும் குளத்தில் குளிப்பதில்லை...



முன்பெல்லாம் கிராமங்களில் ஆறு குளங்களில் குளிப்பதென்பது அன்றாட நடைமுறைகளில் ஒன்று. தினமும் காலையில் எழுந்து பல் துலக்கி குளிக்க அருகில் உள்ள குளங்களுக்கோ அல்லது ஆற்றுக்கோ செல்வார்கள். அந்த குளிர்ந்த நீர் அவர்களை நாள் முழுக்க ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும். ஆனால் இன்றைய காலகட்டங்களில் ஆறு அல்லது குளங்களில் குளிப்பதென்பது கிராமங்களில் கூட அரிதான ஒன்றாகிவிட்டது.

நானெல்லாம் பனிரெண்டாம் வகுப்பு வரை ஆற்றுக் குளியல்தான். எங்கள் வீட்டிலிருந்து கூப்பிடு தூரம்தான் காவிரி, அருகிலேயே கோயில் குளம், அதனால் குளங்களில் குளிப்பதென்பது வழக்கமான ஒன்று.
சமீபத்தில் எங்கள் ஊருக்கு போயிருந்தேன். குளத்தில் பயலுங்க ஒரே கொட்டம் அடிப்பானுங்க, என்று ஆசையோடு போய் பார்த்தா... ஊர் குளம் பாசி பிடிச்சிப் போய், படித்துறையெல்லாம் வீணாகிக் கிடந்தது. என் வயதொத்த சிறுவர்களுக்குப் பிறகு வந்த மூன்றாம் தலைமுறை பசங்க குளத்துக்கெல்லாம் வருவதில்லை. எல்லோர் வீட்டிலும் குளியலறை கம் கழிவறை கட்டிய பிறகு யாரும் வெளியே வருவதில்லை.

எல்கேஜி படிக்கும் போது, நாங்கள் குடவாசலில் இருந்தோம், வீட்டிற்கு எதிரிலேயே சோழ சூடாமணி ஆறு. கூப்பிடும் தூரத்தில் எனது தந்தை பணிபுரியும் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி. எனது தந்தை குளிக்க ஆற்றுக்கு செல்லும்போதே நானும் கூட குளிக்க சென்றுவிடுவேன்.
சுழித்துக் கொண்டு ஓடும் ஆறு. பாதுகாப்பான இடத்தில் நிற்க வைத்து எனக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பார் தந்தை. காலுக்கிடையே மணல் அரித்துக் கொண்டு ஓடும், கொஞ்சம் அசைந்தாலும் ஆறு அதன் போக்கில் நம்மை இழுத்துக் கொண்டு போய்விடும். இருந்தும் பழக பழக எதிர் நீச்சல் அடிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். பிறகென்ன அக்கரையும் இக்கரையும் நமக்கு கைவந்த கலையாகி விட்டது.

பிறகு சொந்த கிராமத்திற்கே (திருவாலங்காடு) வந்துவிட்டதால் நீச்சல் அடிக்க அதிக வாய்ப்புக் கிடைத்தது. சிறு வயதில் பகல் நேர விளையாட்டே குளத்தில் நீச்சல் அடிப்பதுதான். அதுவும் குளத்தில் கண்ணாமூச்சி விளையாடுவோம். 'என்னது... தண்ணிக்குள்ள கண்ணாமூச்சான்னு திகைக்காதீங்க...' மேலே படிங்க!.

கோட்டானே கோட்டான் *
ஏன் கோட்டான்...
ஆத்தில குளத்தில மீன் புடிச்சேன்
எல்லாருக்கும் குடுத்தேன்
அவனுக்கு---------- மட்டும் குடுக்கல
எங்க கண்டுபிடி"

*கோட்டான்... என்பது ஒரு இரவு பறவை.

பாட்ட முடிக்கும் போது யாரு எங்கள  புடிக்க போறானோ அவன் பேர சொல்லிட்டு எல்லோரும் தண்ணிக்குள்ள மூழ்க ஆரம்பிச்சுடுவோம். பிறகென்ன ஒரே உள் நீச்சல்தான். அதுவும் உள் நீச்சல் அடிக்கும் போது, கீழே கால் படக் கூடது. சேற்றில் கால் பட்டால், அது நாம் போகும் பாதையை காட்டிக் கொடுத்துவிடும். அதனால் சேற்றில் கால் படாமல் நீந்துவோம். அதனால யாரு எங்க இருக்கான்னு கண்டுப் பிடிப்பது கஷ்டமா இருக்கும். ஒவ்வருவனையும் பிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

ஆனால் இன்று அதே குளம் சுருங்கி போய், பாசிப் படிந்து பார்க்கவே பாவமாய் இருக்கிறது. இப்போதெல்லாம்  குளங்களை மீன் வளர்க்க குத்தகைக்கு விட்டு காசு பார்த்துவிடுகிறது ஊர் நிர்வாகம். அவர்கள் குளத்திற்கு மேல் ஒரு பெரும் வலையைக் கொண்டு மூடி 'கட்ளா கெண்டை' மீன்களை வளர்க்கிறார்கள். இதனால் மீன் கொத்தி, கருவாட்டு வாலி போன்ற பறவைகள் குளத்தில் வந்து அமர்வதில்லை. குளத்தில் மீன் பிடிக்க முடிவதில்லை.  

நம்மை போன்றே பறவைகளும் குளத்தின் பயனை அடைய முடியாமல் போய் விடுகிறது. இது எத்தகைய ஒரு இயற்கை இழப்பு, என்பதை என்னைப் போன்று அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அதோடு இல்லாமல் மீன்களுக்கு போடும் செயற்கை உணவு மற்றும் கழிவுகள்,  மருந்துகள் தண்ணிரின் இயற்கை தண்மையை பாதித்து எதிர்காலத்தில் நாம் அதை பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது என்பதுதான் நிஜம்

கிராமங்களும் தங்களது உண்மையான முகத்தை இழக்கத் தொடங்கி விடுமோ என்கிற பயம் என்னை பலமாக ஆட்கொண்டது.

வெள்ளி, செப்டம்பர் 10, 2010

தமிழ்தான் சம்ஸ்கிருதத்துக்கே தந்தை மொழி - தினமணி

ஒரு வரலாற்று முக்கியத்துவம் நடந்திருக்கிறது தமிழுக்கு. தினமணியின் நேற்றைய (09/09/2010) தலையங்கத்தில்   'தமிழ்தான் சம்ஸ்கிருதத்துக்கே தந்தை மொழியாக இருந்திருக்கக்கூடும் என்பதற்குப் பல சான்றுகளை முன்வைக்க முடியும்.'  என்கிறது தினமணியின் தலையங்கம்.

தமிழ் வழிகல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவைப்பில் 20% விழுக்காடு ஒதுக்கீடு, வழங்குவது  தொடர்பாக எழுதப்பட்ட,  தலையங்கத்தில் மேற்கொண்டவாறு கூறியுள்ளது தினமணி நாளிதழ்.

தேவநேயப் பாவணார் முதற்கொண்டு பல்வேறு தமிழ் அறிஞர்கள்  இதற்காகத்தானே போராடினார்கள்.  தமிழ் மொழி சம்ஸ்கிருதத்திளிருந்துதான் வந்தது என்று பொய் உரை கூற முயன்றவர்கள் ஏராளம் ஏராளம். பொய்யை மெய்யாக்க தலைமுறை தலைமுறையாய் முயன்றவர்களும் உண்டது.

ஆனால், தமிழனுக்கே உரிய தாய்  மொழி  பற்று, அதை தவிடிப் பொடியாக்கி தமிழை நாம் இன்றளவும் வாழவைத்துள்ளும்.  தமிழ் கூறும் நல் உலகில் தமிழுக்கு முக்கியத்துவம் வந்துவிடக்கூடாது என்பதற்குத்தான் பலர் முயற்சி செய்து வரும் வேளையில் இந்த தலையங்கம் நமக்கு பெரும் ஆறுதலை தருகிறது.





....இனி தலையங்கம்.


ஒரு மிகப்பெரிய சரித்திர நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. ஆனால், நாம் அதன் முக்கியத்துவத்தையும், இதனால் தமிழுக்கு ஏற்படவிருக்கும் வளர்ச்சியையும் உணராமல் இருக்கிறோம். தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு என்பது என்ன சாதாரண விஷயமா?


முன் எப்போதும் இல்லாத பேரழிவைத் தமிழ்மொழி சமீபகாலமாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. வேறு எந்த மொழியினரும் காட்டாத பிறமொழி மோகத்தைத் தமிழன் ஆங்கிலத்திடம் காட்ட முற்பட்டிருக்கும் காலகட்டம் இது. தமிழில் படிப்பது இருக்கட்டும், தமிழில் பேசுவதேகூட கௌரவத்துக்கு இழுக்கு என்று இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு தவறான கருத்து வேரூன்றிவிட்டிருக்கும் அவலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வீட்டிலும்கூட ஆங்கிலம் பேசினால்தான் பெருமை என்று கருதிப் புளகாங்கிதப்படும் நிலைமை. இப்படி ஒரு சூழலில், தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் அவசரச் சட்டம், இருட்டுக் குகையில் வெளியில் செல்ல வழி தெரியாமல் திணறுபவனுக்கு எங்கோ ஒரு ஒளிக்கீற்று திடீரெனத் தெரியவந்தாற்போன்ற பேருவகையை, நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவிலுள்ள வேறு எந்த மாநிலத்தவரும் மொழியினரும், ஆங்கிலம், இந்தி என்று எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும், தங்களுக்குள் தங்கள் வீட்டில், நண்பர்களுடன் பேசும்போது தாய்மொழியில் மட்டுமே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழன் மட்டும்தான் தமிழ் தெரியாது என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும் ஒரு இனத்தவனாகக் காணப்படுகிறான். பலர் தங்கள் குழந்தைகள் தமிழ் தெரியாமல் வளர்வது தவறில்லை என்று கூடக் கருதுகிறார்கள்.

இதற்கு முன்பே தலையங்கத்தில் நாம் குறிப்பிட்டிருக்கும் விஷயம்தான் என்றாலும் அதை மீண்டும் கூறுவதில் தவறில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தங்கள் குழந்தைகளுக்கு, அதுவரை தங்கள் தாய் தகப்பன் பெயரைச் சூட்டி மகிழ்ந்தது போய், நல்ல தமிழில் பெயர்களைச் சூட்டவேண்டும் என்கிற தமிழ் உணர்வு மேலெழுந்தது. தமிழ்ச்செல்வன், கயல்விழி, தென்னவன், நெடுஞ்செழியன் என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்ட குழந்தைகள் படித்து வளர்ந்து திருமணம் செய்து கொண்டபோது, எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தங்களது குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள், எந்தவித அர்த்தமும் இல்லாத சினிமா நடிக, நடிகைகளின் பெயரும், ரமேஷ், சுரேஷ், ராஜேஷ் போன்ற வடமொழிப் பெயர்களும். இப்போது அதுவும்போய் சன்னி, புன்னி என்று அர்த்தமில்லாமல் பெயர் சூட்டும் அவலநிலை ஏற்பட்டு விட்டிருக்கிறது.

தமிழகத்தில் மட்டும்தான், தாய்மொழியில் படிக்காமல் தமிழே தெரியாமல் ஒரு குழந்தை படித்து முனைவர் பட்டம் வரை பெற முடியும் என்கிற நிலைமை தொடர்கிறது. தற்போதைய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் செய்த ஒரு மகத்தான முடிவு, தமிழைக் கட்டாயப் பாடமாக அறிவித்தது. அத்துடன் நின்றுவிடாமல் இப்போது அரசு வேலைவாய்ப்பிலும் தமிழ்ப் பாடமொழியில் படித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்குவது என்று பிறப்பித்திருக்கும் அவசரச் சட்டம், தமிழன்னைக்குச் செய்திருக்கும் அளப்பரிய திருத்தொண்டு.

நமக்குத் தெரிந்து தொல்காப்பியர் காலத்திலிருந்தோ, அதற்கு முன்போ கூட வடமொழி இருந்திருக்கிறது. வடமொழியால் சங்க இலக்கியங்கள் தடைபடவில்லை. தமிழின் வளர்ச்சியை வடமொழி தடுக்கவில்லை. சொல்லப் போனால், தமிழ்தான் சம்ஸ்கிருதத்துக்கே தந்தை மொழியாக இருந்திருக்கக்கூடும் என்பதற்குப் பல சான்றுகளை முன்வைக்க முடியும். வடமொழிக்குப் பிறகு ஒன்பதாம் நூற்றாண்டில், இஸ்லாமியப் படையெடுப்பைத் தொடர்ந்து உருது தமிழகத்துக்கு வந்தது. உருது தமிழுக்கு வளம் சேர்த்ததே அன்றி, தமிழ் வளர்ச்சியைத் தடை செய்துவிடவில்லை. அதேபோல, விஜயநகர சாம்ராஜ்யப் படையெடுப்பால் வந்த தெலுங்கும், மராட்டியப் படையெடுப்பால் வந்த மராட்டியும் தமிழின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கவில்லை. இந்த மொழிகளால் எல்லாம் தமிழை வழக்கொழிந்து போக வைக்க முடியவில்லை.

ஆனால் ஆங்கிலேயர்கள் நுழைந்து வெறும் நானூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை. நாம் தமிழைத் தமிழனிடம் தேடவேண்டிய அவலநிலை அரங்கேறி விட்டிருக்கிறது. இதற்குக் காரணம், வடமொழியோ, உருதோ, தெலுங்கோ, மராட்டியோ ஆட்சி மொழிகளாக இங்கே கோலோச்சவில்லை. ஆங்கிலேயர்கள் வந்தவுடன், ஆங்கிலம் படித்தவர்களுக்குத்தான் அரசு வேலைவாய்ப்பு என்று ஆகிவிட்டபோது, தமிழ் தமிழனின் மனதிலிருந்து தடம்புரளத் தொடங்கிவிட்டது. மொழிப்பற்றை அவனது வயிற்றுப் பசி விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், அமைந்த மாநிலங்களில் மாநில மொழிகள் ஆட்சி மொழியாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆங்கிலமும், இந்தியும் தொடர்பு மொழிகளாக உயர்மட்ட அளவிலும், மாநில மொழிகள் அன்றாட அலுவல் மொழியாகவும், மாநில மொழி படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்றும் அரசு முடிவெடுத்திருந்தால், இந்த அளவுக்கு ஆங்கில மோகம் வளர்ந்திருக்காது. தமிழும் இத்தகைய பின்னடைவைச் சந்தித்திருக்காது.

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவித்தபடி, இப்போது முதல்வர் கருணாநிதி சொன்னதைச் செய்து காட்டிவிட்டார். ஏன் 20 விழுக்காடு மட்டும் ஒதுக்கீடு? தமிழ் மொழியைப் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை என்று சட்டம் இயற்றக்கூடாதா என்று சிலர் விதண்டாவாதம் பேசக்கூடும். அப்படிச் செய்திருந்தால், ஆந்திரத்தில் ஏற்பட்டதுபோல, பிரச்னை உச்ச நீதிமன்றம் வரை சென்று, சட்டம் ரத்தாகி இருக்கும். "முதலில் 20 விழுக்காடு ஒதுக்கீடு சட்டமாகட்டும், பிறகு படிப்படியாக உயர்த்திக் கொள்ளலாம்' என்கிற முதல்வரின் சாதுர்யமான முடிவு அவரது நீண்ட அரசியல் அனுபவத்தையும், நிர்வாகத் திறமையையும் வெளிச்சம் போடுகிறது.

ராஜாஜியின் சாதனை என்று நினைவுகூற மதுவிலக்கு; காமராஜின் சாதனை என்று சரித்திரம் பதிவு செய்வது இலவசக் கல்வித் திட்டம்; அண்ணாவின் பங்களிப்பு என்பது தமிழ்நாடு என்கிற பெயர்மாற்றம்; எம்.ஜி.ஆரை நினைவில் நிறுத்துவது சத்துணவு. முதல்வர் கருணாநிதியைப் பற்றி வருங்காலம் பதிவு செய்யப் போவது, தமிழ் வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தவர் என்பதாகத்தான் இருக்கும்.

அதற்காக, தமிழகம் இந்தச் சட்டத்தைக் கரவொலி எழுப்பி வரவேற்க வேண்டும். இப்படி ஒரு சட்டத்தைப் பிறப்பித்து தமிழுக்கு மறுவாழ்வளித்த தமிழக முதல்வருக்கு ஒவ்வொரு தமிழனும் தலைவணங்கி நன்றி செலுத்தவேண்டும்!

இந்த ஒரு சட்டத்தின் விளைவாகத் தமிழ் மீண்டும் தலைநிமிரும்!


-நன்றி தினமணி.

புதன், ஆகஸ்ட் 18, 2010

இதற்கும் உமாசங்கரே காரணமாக இருந்துவிடுவாரோ...!

அப்போது நான் மயிலாடுதுறையில் மன்னம்பந்தல்லில் உள்ள AVC  கல்லூரியில்  இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்றுக்  கொண்டு இருந்தேன்.  அப்போது சோழன் போக்குவரத்து ஊழியர்களுக்கும் கல்லுரி மாணவர்களாகிய எங்களுக்கும்  சண்டை மூண்டது.  சிறிய அளவில் தொடங்கிய சண்டை பல கல்லூரிகளுக்கும் பரவி பெரும் கலவரவமாக வெடித்தது.

தனியாக மாட்டிக் கொண்ட மாணவர்களை போக்குவரத்து ஊழியர்கள் வெளுப்பதும், மாணவர்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து,  நடத்துனர், ஓட்டுனர்களை திருப்பி தாக்குவதுமாக,  கலவரம் ஒரு வாரமாக மயிலாடுதுறையின் சுற்று வட்டாரங்களில் நடந்துக் கொண்டு இருந்தது. கல்லூரிகளுக்கு எல்லாம் விடுமுறை விட்டுவிட்டார்கள்.

புத்தகம் வைத்துக் கொண்டு ரோட்டில் எவன் நடந்தாலும் அடி, நானெல்லாம் போலீஸ் நிலையத்தில் நுழைந்து தப்பி வந்தது தனி கதை!.

அப்போது மயிலாடுதுறையில் சப் கலக்டராக இருந்தவர் உமாசங்கர்.  இந்திய ஆட்சி பணி முடிந்து, முதன் முறையாக துணை ஆட்சியராக அங்கு பதவியேற்றிருந்தார்.  குள்ளமான உருவம், சற்றே அரும்பிய தாடி என்று அவரும் ஒரு மாணவரைப் போல்தான் இருந்தார்.

கலவரத்தின் நிலவரத்தை  உணர்ந்த உமாசங்கர்,  மாணவர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களை அமைதி பேச்சு  வார்த்தைக்கு அழைத்தார்.  பேச்சு வார்த்தை  அவரது கலெக்டர் பங்களாவில்   நடைப் பெற்றது.  அப்போது இரு தரப்பும் ஆயுதங்களோடுதான் குழுமினார்கள். நாங்கள் எல்லாம் லாரியில்,  மாணவர்களை திரட்டி பேச்சு வார்த்தைக்கு சென்றோம்.

பேச்சு வார்த்தையின் போது முரண்டு பிடித்த இரு தரப்பையும் சமாதானம் செய்து,  சுமுகமாக பேசி,  பெரும் கலவரம் நடக்காமல் தடுத்தார்  உமாசங்கர்.   அதிலிருந்து மாணவர்களின் ஹீரோவாகிவிட்டார்.  அவரது முயற்சி, மற்றும் அணுகுமுறை மாணவர்களிடையே பெரும் தாகத்தை ஏற்படுத்தியது.

சுடுகாடு கொட்டகை ஊழலை வெளிகொணர்ந்து  அதிமுக ஆட்சியை வெளியேற்ற உதவியது. அதனாலேயே திமுகவின் ஆதரவு அவர் கேட்காமலேயே அவருக்கு கிடைத்தது.  இன்று அதுவே அவருக்கு எமனாகி விட்டது.

அவர் பதவி பறிப்பிற்கு சொல்லப்படும் காரணம் சிறு குழந்தை கூட எற்றுக்கொள்ளதது ஆகும் .

 பொதுவாக  திரைப் படங்களில் தான், இத்தகைய காட்சிகளை காண முடியும்.  நேர்மையான அதிகாரிகளை பழிவாங்க,  அவர்கள் மீது வீண் பழி சுமத்தி, அவர்களை பதவியைவிட்டே தூக்கி எறிவார்கள்.    அது இன்று நமது கண்முன்னே நடந்திருக்கிறது.

ஆளும் திமுகவிற்கு சில பல விழையங்களில் வளைந்து கொடுக்கவில்லை என்பதால், உமாசங்கர் சாதியின் பெயரால் பலி  கொடுக்கப் பற்றிருக்கிறார். இதற்கு முழுக்க முழுக்க் காரணம் கருணாநிதியின் குடுப்பத்தினர்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

கலைஞர் எது செய்தாலும், கூக்கிரலிடும் ஜெயலலிதா உமாசங்கர் விசயத்தில் வாய் திறக்க மறுக்கிறார்.  அவருக்கு அப்படி ஒரு வலி!!(?).

அதிமுக ஆட்சியை அகற்ற உமாசங்கர் காரணமாக இருந்தார் என்பதால்,
உமாசங்கர்  மீது கலைஞர்  கருணாநிதிக்கு எப்போதும் தனி பிரியம் உண்டு.  அதனால்தான், தனது சொந்த மாவட்டம் திருவாரூர் உதயமானபோது கூட,  உமாசங்கரைதான்  கலைஞர் கலெக்டராக  போட்டார்.  அந்தளவிற்கு அவர் மீது நம்பிக்கை!. ஆனால், அவரால் கூட உமாசங்கரை காப்பாற்ற முடியவில்லை என்பது தான் ஒரு வரலாற்று கொடுமை.

அன்று அதிமுக ஆட்சியை அகற்ற  (ஒரு)  காரணமாக இருந்த           உமாசங்கர்,
இன்று திமுக ஆட்சியையும் அகற்ற  (ஒரு)  காரணமாக இருந்துவிடுவரோ என்னவோ...?! 

"யாம் அறியேன் பராபரமே."



 

திங்கள், ஜூன் 28, 2010

செம்மொழியில் மலர்ந்த தமிழ் பூக்கள்

நடிகர் சிவகுமார் மேடைதோறும் தமிழ் பூக்களின் பெயர்களை கட கட வென்று வாசிப்பார். தமிழர்களுக்கு மிகக் குறைவாகவே பூக்களின் தமிழ் பெயர்கள் தெரியும். மற்றபடி ரோஜா, டேரிப்பூ, லில்லி, போகன்வில்லா, டிசெம்பர், பட்ரோஸ் போன்ற பூக்களின் பெயர்கள் அத்துப்படி. தொண்ணுற்றி ஒன்பது வகை பூக்களை கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பாடியிருப்பார். அதைதான் நடிகர் சிவகுமார் மனனம் செய்து மேடைதோறும் முழங்கினார். அதனாலேயே தமிழர்களுக்கு நமது மண்ணின் பூக்கள் பற்றி விழிப்புணர்வு வந்திருக்கிறது.



நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு வெளியிட்ட 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' மலரில் அந்த தொண்ணுற்றி ஒன்பது வகை பூக்களின் பெயர்களை படங்களோடு வெளியிட்டுள்ளது.



இனி தமிழ் மண்ணின் பெருமை மிகு பூக்களின் பெயர்கள்....





  1. செங்காந்தாள் (விடுதலை புலிகளின் தமிழ் ஈழத்தில் செங்காந்தாள் மலர்தான் தேசிய மலர்)


  2. ஆம்பல்


  3. அனிச்சம்


  4. குவளை


  5. குறிஞ்சி


  6. வெட்சி


  7. செங்கோடுவேரி


  8. தேமா


  9. மணிச்சிகை (செம்மணி)


  10. உந்தூழ் (பெருமூங்கில்)


  11. கூவிளம் (வில்வம்)


  12. எறுழம்


  13. கள்ளி


  14. கூவிரம்


  15. வடவனம்


  16. வாகை


  17. குடசம் (வெட்பாலை)


  18. எருவை (கோரை)


  19. செருவிளை (காக்கணம், சங்கு)


  20. கருவிளை


  21. பயினி


  22. வாணி (ஓமம்)


  23. குரவம்


  24. பசும்பிடி (இலமுகிழ்)


  25. வகுளம் (மகிழம்)


  26. காயா


  27. ஆவிரை


  28. வேரல் (சிறு மூங்கில்)


  29. சூரல்


  30. பூளை


  31. கன்னி (குன்றி மணி)


  32. குருகிலை (முருங்கிலை)


  33. மருதம்


  34. கோங்கம்


  35. போங்கம்


  36. திலகம்


  37. பாதிரி


  38. செருந்தி


  39. அதிரல் (புனலி)


  40. சண்பகம்


  41. கரந்தை


  42. குளவி (காட்டுமல்லிகை )


  43. கலிமா


  44. தில்லை


  45. பாலை


  46. முல்லை


  47. குல்லை


  48. பிடவம்


  49. மாறோடம்


  50. வாழை


  51. வள்ளி


  52. நெய்தல்


  53. தாழை (தென்னம்பாளை)


  54. தளவம்


  55. தாமரை


  56. ஞாழல்


  57. மொவ்வல்


  58. கொகுடி


  59. சேடல் (பவளமல்லிகை)


  60. செம்மல்


  61. செங்குரலி


  62. கோடல்


  63. கைதை (தாழை)


  64. வழை (சுரபுன்னை)


  65. காஞ்சி


  66. நெய்தல்


  67. பாங்கர்


  68. மரா (கடம்பு)


  69. தணக்கம் (நுணா)


  70. ஈங்கை


  71. இலவம்


  72. கொன்றை


  73. அடும்பு


  74. ஆத்தி


  75. அவரை


  76. பகன்றை


  77. பலாசம்


  78. பிண்டி


  79. வஞ்சி


  80. பித்திகம்


  81. சிந்துவாரம் (நொச்சி)


  82. தும்பை


  83. துழாய் (துளசி)


  84. தோன்றி


  85. நந்தி ( நந்தியாவட்டம் )


  86. நறவம்


  87. புன்னாகம்


  88. பாரம் (பருத்தி)


  89. பீரம் (பீர்க்கு)


  90. குருக்கத்தி


  91. ஆரம் (சந்தனம்)


  92. காழ்வை (அகில்)


  93. புன்னை


  94. நரந்தம் ( நாரத்தம்)


  95. நாகம்


  96. நள்ளிருள் நாறி (இருவாட்சி)


  97. குருந்து (காட்டு எலுமிச்சை)


  98. வேங்கை


  99. புழகு (மலை எருக்கு)


மேற்கண்ட தகவல்களை தினமணி நாளிதழ் தனது செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரில் படத்தோடு வெளியிட்டுள்ளது.



பி கு : தினமணியின் 'செம்மொழி கோவை' புத்தகம் விரிவான விமர்சனம் விரைவில்.















வெள்ளி, ஏப்ரல் 02, 2010

பதிவெழுத நேரமில்லை...

தினமணி 'மாணவர் மலருக்கான' 'விளம்பர சேகரிப்பு ' பணி விறு
விறுப்பாக நடைபெற்று வருவதால், பதிவெழுத நேரமில்லை... என்பதை இதன் மூலம் வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!!!

-தோழன் மபா

சனி, மார்ச் 20, 2010

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு?


மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் இதழியல் படித்த போது, கூட படித்த ஒரு நண்பரின் பெயர் சிட்டுக்குருவி (நாங்கள் வைத்த செல்லப் பெயர்). மனுசன் மகா சுறுசுறுப்பு அதனாலயே அந்த பெயர வச்சோம். திண்டுக்கல்லிலிருந்து வருவார். கூடவே தலைப்பாகட்டி பிரியாணியும் வரும். (ஹூம்... அதெல்லாம் ஒரு காலம்!)

சரி, இந்த பதிவுக்கு அவர் ஒரு 'லீடு' மட்டும்தான். விஷயத்திற்கு வருவோம்.

இன்று உலக சிட்டுக்குருவி தினம்.

நவீன மயமாக்கலில் அழிந்து வரும் உயிரினங்களில் 'சிட்டுக்குருவி'யும் ஒன்று. சிட்டுக்குருவிகளை நாம், நமது வாழ்வில் சந்தோஷம் மற்றும் சுதந்திரத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கின்றோம்.

அழியும் குருவிகள்.

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்று சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப் பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நன்பனான சிட்டுக் குருவி சங்க இலக்கியங்களில் பாடப் பெற்ற உயிரினம் ஆகும். பாரதியார் தனது கவிதைகளில் சிட்டுக் குருவியின் பெருமைகளை பாட மறக்கவில்லை.

காகங்களை போல மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் அறிவுத் திறன் கொண்டது சிட்டுக்குருவிகள். சிதறிய தானியங்களை தலையை சாய்த்து சாய்த்து அது தின்னும் அழகே அழகு!.

அழிந்து வரும் சிறு உயிரினங்களில் சிட்டுக் குருவி மட்டுமல்லாமல் பல்வேறு குருவி இனங்களும் அழியும் தருவாயில் இருக்கிறது.

அதுவும் அறுவடை காலம் என்றால் குருவிகளுக்கு கொண்டாட்டம்தான். எங்கள் ஊரில் வயல் வரப்புகள் ஊடே இரயில் பாதை நீண்டு இருக்கும். இரு புறமும் தந்தி மரங்கள், இரயில் பாதையை தொடர்ந்து சென்றுக் கொண்டு இருக்கும். தந்திக் கம்பிகளில் சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி,கருவாட்டுவாலி, மீன் கொத்தி, நானத்தான் குருவி (மைனா), அக்கா குருவி, பச்சைக் கிளி, என்று ரகத்திற்கு ஒன்றாய் குருவிகள் வரிசை கட்டி அமர்ந்து இருக்கும்.

வயலில் ஆட்கள் நெற்கதிர்களை அறுக்க அறுக்க, அதிலிருந்து பூச்சிகள், வெட்டுக்கிளி, அந்துப் பூச்சி, தட்டான், என்று வித விதமான பூச்சிகள் பறக்கத்தொடங்கும். வரிசை கட்டி காத்திருக்கும் குருவிகள் பறந்து பறந்து பூச்சிகளை வேட்டையாடும். பிறகு தந்தி கம்பங்களில் அமர்ந்து கொள்ளும்.
அத்தகைய கவின் மிகு காட்சிகள் ஆயிரம் இலக்கியத்திற்கு சமம்!.

சில துணிச்சலான சிட்டுக்குருவிகள் மட்டும் ஆட்கள் நெற் கதிர்களை அறுத்து போடும் இடத்திற்கு அருகிலேயே நின்றுக் கொண்டு பூச்சிகளை பிடிக்கும்.

அரி காடை (அறுத்து போட்ட அரிகளில் அமர்ந்து இருக்கும் அதனாலயே அந்த பெயர்), கவுதாரி, கானாங் கோழி போன்ற பறக்க இயலா கோழியினங்கள் அறுவடை நடைபெறும் வயல்களில் மனிதர்களிடமிருந்து கூப்பிடு (ம்) தூரத்தில் இருந்துக் கொண்டு புச்சிகளை பிடிக்கும். இத்தகைய அரிய குருவியினங்கள் இன்று அழிவின் பிடியில் சிக்கியுள்ளது.

மொபைல் போன்களால் ஆபத்து.

களங்கள், வீட்டு முற்றம், மளிகை கடைகள், தானியத் தோட்டங்கள், உணவு தானியங்களை ஏற்றிச் செல்லும் பார வண்டிகள், தானியங்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிகள், வீட்டின் கூரை என்று மனிதன் புழங்கும் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சிட்டுக்குருவிகள் மொபைல் போன் களின் வருகையால் 90 சதவீதம் அழிந்துவிட்டன என்கின்றன ஆய்வுகள்.

மொபைல் போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும் கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது. அதோடு மீதமுள்ள குருவிகளின் கருப்பையில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மெல்ல மெல்ல அருகி வரும் சிட்டுக்குருவியை காப்பது நமது கடமை.

குருவிகளை காக்கும் வழி.

1 பயிர்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளை அடிப்பதை தவிற்போம்.
2 சிறிய வீடானாலும், அபார்ட்மெண்டானாலும் குருவிகளை பாதுகாக்க சிறிய தோட்டங்களை பால்கனியில் அமைக்கலாம்.
3 வீட்டின் ஜன்னல்களை திறந்து வைத்து குருவிகளுக்கு உணவிடலாம்.
4 குருவிகள் குடிக்க சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்.
5 முக்கியமாக ஜன்னலில் வந்தமரும் குருவிகளை 'அச்சூ' என்று விரட்டாத மன நிலை வேண்டும்.

'காக்கை குருவி எங்கள் ஜாதியென்ற பாரதியின் கனவை புத்துயிர் பெறச் செய்வோம்'.

சனி, மார்ச் 13, 2010

ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்களும் உண்டு.

என்னைப் போன்ற மார்க்கெட்டிங் மனிதர்களுக்கு சென்னையின் வெயிலுக்கு ஒதுங்க நிழல் சார்ந்த இடங்கள் எப்போதும் பிரியமான ஒன்று. அதில் ஓமந்தூரார் தோட்டமும் ஒன்று.

அரசு உயர்மட்ட அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர்களின் தங்கும் விடுதி, காவல் துறை சார்ந்த அலுவலகங்கள், எப்போதும் கஞ்சிப் போட்ட வெள்ளை சட்டையில் திரியும் உடன்பிறப்புகள் என்று அதிகார வர்க்கத்தின் அத்தனை அடிப்படை இலக்கணத்தோடு காட்சி தரும் ஓமந்துரார் தோட்டம்.

மதியத்தில் மவுண்ட் ரோடு, திருவல்லிகேணி போன்ற பகுதிகளில் 'கால்ஸ்' (வாடிக்கையாளர் சந்திப்பு) இருந்தால் சிறிது மதிய ஓய்வு நிச்சயம் ஓமந்தூரார் தோட்டம்தான். நிழல் சார்ந்து வெயிலின் தாக்கம் இன்றி எப்போதும் குளு குளு என்று இருக்கும்.




பொதுவாக 'மார்கெட்டிங் பீப்புள்' மதிய உணவிற்கு ஏதாவது ஒரு இடத்தில் ஜமா சேருவார்கள். நகரம் முழுவதும் அலையும் இவர்களுக்கு எங்கெல்லாம் நல்ல உணவு கிடைக்கும், எங்கெல்லாம் உண்ட களைப்புத் தீர சிறிது ஓய்வு எடுக்கலாம் என்பதும் அத்துப்படி. அந்தப் பட்டியலில், சென்னையில் ஓமந்தூரார் தோட்டமும் ஒன்று.

மதியம் சாப்பிட்டு விட்டு வண்டியை அங்கே ஓட்டுனா. பெரிய பெரிய தூங்குமூஞ்சி மரங்கள் வரலாற்றின் வாசனையோடு வீற்றிருக்கும். எப்போதாவது ராஜாஜி ஹாலில் சினிமா படப்பிடிப்பு நடந்துக் கொண்டு இருக்கும். ராஜாஜி ஹாலின் எதிர்புரம் ஒரு பள்ளிக் கூடமும் அதன் அருகில் ஒரு ஆல மரமும் இருந்தது. அதை எடுத்து விட்டார்களா என்று தெரியவில்லை? உள்ளேயே ஒரு தான் தோன்றி விநாயகர் கோவிலும் இருக்கிறது.

பழைய சட்டமன்ற விடுதி இருக்கும் போது உள்ளே கடைகளெல்லாம் கிடையாது. எது வாங்க வேண்டும் என்றாலும் மவுண் ரோட்டுக்கோ அல்லது அருகில் உள்ள சேப்பாக்கம் சாலைக்கோதான் சொல்லவேண்டும். பிறகு கலைஞர் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியை மிக பிரமாண்டமாய் கட்டினார். அதற்கு பிறகு அந்த இடம் நிறைய மாற்றங்களை பெற்றது. ஆவின் பாலகம், அம்மா ரெஸ்டாரண்ட், தளபதி உணவகம், இரண்டு டீ கடை என்று அதன் வியாபரா உலகம் சற்றே விரிவடைந்தது.

பிறகு புதிய சட்டமன்றம் கட்டத்தொடங்கியதும் அவ்வளவாக அங்க செல்ல முடியவில்லை. இனியும் முன்புபோல் அங்கு செல்ல முடியுமா என்று தெரியவில்லை ?.

போகட்டும் அங்கு நடந்த ஒரு சம்பவத்தை கூறுகிறேன்.

இப்படித்தான் நானும் எனது தம்பியும் (டாக்டர் ஷங்கர்) ஒரு நாள் ராஜாஜி அரங்கின் எதிரில் நின்று பேசிக்கொண்டு இருந்தோம், அப்போது ஒரு மனிதர் கருப்பாக கண்ணாடி போட்டுக் கொண்டு 'அரக்க பரக்க' ஓடிவந்தார். "சார்..சார்... என்னோட பணத்தை யாரோ பிக் பாக்கெட் அடிச்சிட்டாங்க சார். என்னோட பொண்ணுக்கு, செமஸ்டருக்கு பணம் கட்ட சென்னை பல்கலைகழத்திற்கு வந்தேன் சார். இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சது பஸ்ல யாரோ பணத்த பிக் பாக்கெட் அடிச்சிட்டாங்க சார். இன்னைக்கு பீஸ் கட்ட கடைசி தேதி சார். எனக்கு சொந்த ஊரு திருவள்ளுர், அங்க போயிட்டுவரத்துக்கு டைம் இல்ல சார். நான் திருத்தணியில ஒரு பள்ளிக் கூடத்தில ஹெட் மாஸ்டரா இருக்கேன் சார்" என்று பள்ளி அடையாள அட்டையைக் காட்டினார்.

சொன்னவருக்கு 50 லிருந்து 60 வயது வரை இருக்கும். மழுங்க சவரம் செய்து, கோல்ட் பிரேம் கண்ணாடி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார். பார்க்க கெளரவமான தோற்றத்தில் இருந்தார். " நான் திருத்தணியில ஒரு மெடிக்கல் ஷாப்பும் வச்சிருக்கேன் சார். 300 ரூபாய் பணம் கொடுத்திங்கன்னா, தேர்வுக்கு பணம் கட்டிடுவேன் சார்" என்றார். அப்போதும் அவரிடம் பதற்றம் தணியவில்லை.

"பணத்த உங்களுக்கு உடனே எம்.ஓ அனுப்புறேன் சார்" என்று தனது பெயர், தொலைபேசி எண், வீட்டு விலாசம் எழுதித்தந்தார். எங்கள் போன் நம்பரையும் வாங்கிக் கொண்டார். நாங்கள் பரிதாபப் பட்டு தேர்வுப் பணம் 300 கூட பஸ்ஸுக்கு 50 ம் சேர்த்துக் குடுத்தோம்.

வாங்கியவர் கண் கலங்கியப் படி நா தழுதழுக்க நன்றி கூறி சென்றார். எங்களுக்கோ உள்ளுக்குள் பெருமிதம், இப்படி கஷ்டப் பட்ட ஆளுக்கு உதவி செஞ்சோமே என்று. அவர் நா தழு தழுக்க நன்றி கூறியது ரொம்ப நாளைக்கு எங்கள் கண் முன்னாடியே நின்றது.

ஆயிற்று, நாட்கள் இரண்டானது, மூன்றானது, ஒரு வாரம் ஆனது. அவரிடமிருந்து எந்த ஒரு தொலைபேசி அழைப்பும் வரவில்லை. நான் அவர் கொடுத்த தொலைபேசிக்கு தொடர்பு கொண்டேன், 'நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும்' என்றது. அப்போதுதான் நாங்கள் ஏமாற்றப் பட்டதை உணர்ந்தோம்.

ஒரு மனிதன் கஷ்டம் என்று வரும்போது உதவி செய்வது தவறா?. அதுவும் வயதானவர், தேர்வுக்கு பணம் இல்லை என்கிறாரே என்று நம்பி பணம் கொடுத்தோம். இப்படி தத்ரூபமாக நடித்து நம்மை ஏமாற்றி விட்டனே என்று எங்களுக்கு மனசே சரியில்லை. 'அந்த நாயி மட்டும் கையில் கிடைத்தால் அவ்வளவுதான்' என்று மனதிற்குள் கருவிக் கொண்டோம்.

அந்த நாளும் வந்தது.

மூன்று மாதம் கழித்து ஒரு நாள் காலை 11 மணி இருக்கும், ஷங்கர் எனக்கு போன் செய்தான். " உடனே என் கிளினிக்குக்கு வாடா, நம்பள ஏமாத்திட்டு போனவன புடுச்சி வச்சிருக்கிறேன்" என்றான். எனக்கு உள்ள கோபத்தை வண்டியில் காட்டினேன்.

போனா... சார் சேர்ல கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். போன வேகத்தில் போட்டேன் ஒன்னு. அங்க திட்டுனத இங்க எழுத முடியாது.

விசாரித்ததில் அவனுக்கு இதுதான் வேலையாம். ஒரு பகுதிக்கு வந்து ஏமாற்றினால், அந்த பகுதிக்கு மீண்டும் செல்வது 4 அல்லது 5 மாதம் கழித்துதானாம். திருவாளர் திருடனாரின் அன்றைய விஜயம் பெஸண்ட் நகர். இவன் கிளினிக் அருகில் வந்து யாரையோ புருடா விட்டு ஏமாற்ற முயல, அப்போது பிடிபட்டிருக்கிறான்.


திருத்தணி முருகன் கோயிலில் உள்ள சத்திரத்தில்தான் ஜாகை. காலையிலேயே தொழிலுக்கு கிளம்பிவிடுவாராம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏரியாவாம். குறைந்தது 200 லிருந்து 500 வரை கிடைக்குமாம். ஒரே ஒரு மகனாம். தகப்பனின் இந்த திருட்டுத்தனம் தெரிந்து வீட்டை விட்டு அனுப்பி விட்டானாம். அதிலிருந்து திருட்டை முழு நெர தொழிலாக கொண்டுள்ளார். 'தினம் ஒரு ஏரியா, சுக போக வாழ்க்கை' என்று நோகாமல் நொங்கு தின்றிருக்கிறான்.

பிறகென்ன... நம்பர் 100 க்கு போன் செய்து அவனை காவல் துறையினரிடம் ஒப்படைத்தோம்.

பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்ற நமது 'ஈகை குனம்' இத்தகைய ஏமாற்று பேர்வழிகளால் நசுக்கப் படுகிறது. யாரவது உண்மையாய் உதவிகள் கேட்டால் கூட, நம்மால் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்க முடிகிறது. இத்தகைய நூதன திருடர்கள் இன்றும் நாட்டில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

வாய் இல்லா ஜீவனா ? இல்லை பேச்சில்லா ஜீவனா?

சனிக்கிழமை என்பதால் அரை நாள்தான் அலுவலகம்.
சாப்பிட்டுவிட்டு தூங்கலாம் (வீட்டில்தாங்க..) என்றுப் பார்த்தால், எனது இரண்டு வயது மகன் 'நை'யென்று அழுதுகொண்டு இருந்தான். எனது மகளும் "வெளியே எங்காவது போகலாம் ப்பா" என்றாள்.

எனது இருசக்கர வாகனத்தில் இருவரையும் அழைத்துக் கொண்டு, என் வீட்டின் அருகில் உள்ள 'அன்னனுர்' இரயில் நிலையத்திற்கு சென்றேன். அன்னனுர் இரயில் நிலையம், சென்னை ஆவடி இரயில் மார்க்கத்தில் திருமுல்லைவாயிலுக்கும் ஆவடிக்கும் இடையில் இருக்கிறது. அதிகம் அறியப்படாத இரயில் நிலையம் அது!. பரந்து விரிந்து, அதிகம் கூட்டம் இல்லாமல் பார்க்கவே அழகாக இருக்கும். சென்னை தமிழில் சொல்வதென்றால் 'ஜில்லோன்னு' இருக்கும்.

2006 வாக்கில் நான் இங்கு வீடு வாங்கிக்கொண்டு வந்தேன். அப்போதுதான் இங்கு ஒரு இரயில் நிலையம் இருப்பதையே பார்த்தேன். பார்த்ததும் பிடித்துவிட்டது. அருகிலேயே இரயில் பணிமனையும் இருக்கிறது.

வேகமாக வளர்ந்துவரும் புறநகர் பகுதி இது. திருமுல்லைவாயில், அன்னனுர் பகுதிகளில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறன. சென்னையில் வீடு வாங்கும் எண்ணம் உள்ளவர்கள் இங்கு முயற்சி செய்யலாம். விலையும் சற்று குறைவுதான்.

போகட்டும் விஷயத்திற்கு வருவோம்...

பைக்கை மெதுவாக ஓட்டிக் கொண்டு இருந்தேன்.

அருகில் மாடுகள் மேய்ந்துக் கொண்டு இருந்தது, என்னைப் பார்த்து என் மகள் கேட்டாள்...

" அப்பா, இங்க மாடு 'அம்மா'ன்னு கத்துது. லண்டன்ல எப்படி கத்தும் மதர்ன்னு கத்துமா? " என்றாள்.

"இல்லம்மா மாடு எந்த மொழியில கத்தினாலும் 'அம்மா'ன்னுதான் கத்தும். மதர்ன்னெல்லாம் கத்தாது" என்றேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக வந்தவள்.

மீண்டும் ஒரு கேள்வி கேட்டாள்.

'ஏம்பா... எதுக்கு நாம மாட்டெல்லாம் 'வாயில்லா ஜீவன்'னு சொல்றோம்?. அதுக்குதான் வாய் இருக்கே. அப்படின்னா அதுங்கள நாம 'பேச்சில்லா ஜீவன்னு'தானே சொல்லனும் என்றாள்".

ஒன்றாம் வகுப்பு படிக்கும் எனது மகளிடமிருந்து இந்தக் கேள்வியை நான் சற்றும் எதிர்ப்பார்கவில்லை.

பொதுவாக மிருகங்களை நாம் வாயில்லா ஜீவன்னுதான் சொல்கிறோம். அதாவது; எதைவைத்து அப்படிச் சொல்கிறோம், அதுங்களால பேசமுடியாது என்பதால்தான். மற்றப்படி கத்தும், உங்களை உணர்ந்துக் கொள்ளும், தழை, வைக்கோல் உண்ணும், தண்ணி குடிக்கும். பேச்சைத் தவிர இன்னபிற வேளைகளையும் செய்யும். அப்படி இருக்க அதை நாம் வாயில்லா ஜீவன்னு சொல்றதைவிட 'பேச்சில்லா ஜீவன்னு' சொல்றதுதானே சரி?

தெரிந்தவர்கள் கொஞ்சம் தெளிவுப்படுதுங்களேன்?

வியாழன், பிப்ரவரி 25, 2010

ஒரு பாலியல் தொழிலாளியின் கதை


கலைவாணி.
ஒரு பாலியல் தொழிலாளியின் கதை


சென்னை பாரீஸ் கார்னரில் ஹை கோர்ட் ஓரம், தி நகரில் நல்லி 100 அருகில், போத்தீஸ் எதிர் ரோடு என்று பாலியல் தொழிலாளிகளை சில இடங்களில் பார்த்ததுண்டு. சிவப்பு ,கருப்பு, மஞ்சள் என்று விதவிதமான சேலைகளில், அதிகப்படியான ஒப்பனைகளில் நின்று கொண்டு இருப்பார்கள். நான் சொல்வது 1996 அல்லது 98 என்று நினைக்கிறேன். அவர்களை பார்த்தவுடனே தெரிந்து விடும் இவர்கள் 'அப்படிப்பட்ட பெண்கள் (?)' என்று.

அவர்களை பார்த்தால் அப்படி ஒன்றும் வளமான வாழ்க்கை வாழ்பவர்களாகத் தெரியாது. வறுமையின் பிடியில் வாழ்க்கையை ஓட்டுபவர்களாத்தான் தெரியும். அங்கே நிற்பவர்கள் யாரும் தானாக தேடி இந்த தொழிலுக்கு வந்திருக்கமாட்டார்கள். சூழ்நிலை கைதிகளாய் வாழ்க்கையின் கோரப்பிடியில் சிக்குண்டு, கரை ஒதுங்கி நிற்பவர்கள் என்று நினைத்துக் கொள்வேன்.

அப்படி ஒரு பாலியல் தொழிலாளியின் கதையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. கிழக்கு பதிப்பத்தின் தயாரிப்பாக இந் நூல் வெளிவந்திருக்கிறது.

கலைவாணி. ஒரு பாலியல் தொழிலாளியின் கதை


ஒரு பெண் எங்கு தவறு செய்கிறாள், எப்படி பாலியல் தொழிலுக்கு தள்ளப் படுகிறாள்? என்பதை இப் புத்தகத்தை வாசிக்கும்போதே புரிந்துவிடுகிறது.


இக் கதையில் (கதையல்ல நிஜம்!) வரும் கலைவாணியும் அப்படித்தான். எங்கெல்லாம் பிறர் மனம் கோணக் கூடாது என்று நினைக்கின்றாறோ அங்கெல்லாம் அவர் பெண்டாளப்படுகிறார். குடுப்பச் சூழலும் அவர் எடுக்கும் முடிவுகளும் அவரை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறது என்று கதையின் போக்கோடு சென்று நாமும் தெரிந்துக் கொள்கிறோம்.

இப் புத்தகத்தை படிக்கப் படிக்க சென்னையின் விகாரமான மறுப்பக்கம் புரிகிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

ஒன்றுமே அறியாத கிராமத்து சிறுமியாக இருக்கும் கலைவாணி எப்படி ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக உருமாறுகிறார் என்பதை மிக யதார்த்த நடையில் கூறுகிறார் ஜோதி நரசிம்மன்.

'மகனின் மருத்துவ செலவுக்கு பணம் தருகிறேன் வா..'என்று, ஒருவன் பாரிமுணை அந்தோணியார் கோவிலுக்கு அருகில் இருந்து அவளை கூட்டிக் கொண்டு 'திருவேற்காடு' செல்கிறான். அங்கு அவரோடு பாலியல் தொடர்பு கொண்டுவிட்டு "இதோ... வீட்டில் போய் பணம் எடுத்து வருகிறேன் நீ பஸ் ஸடாண்டில் வைட் பண்ணு" என்று கூறிவிட்டு கம்பி நீட்டி விடுகிறான்.

பசிமயக்கம் காதை அடைக்க இரவு வரை காத்திருக்கும் கலைவாணியிடம் 3 ரூபாய் மட்டுமே இருக்கிறது. இரவு 9.30 மணிக்கு கடைசியாக கிளம்பும் வடபழனி பஸ்ஸும் கிளம்பத் தயாராகிறது, 'இதைவிட்டால் வேறு வழியில்லை' என்று துயரத்தோடு ஓடிச் சென்று பஸ்ஸில் ஏற....


என்னிடம் இருந்த 3 ரூபாயை கண்டக்டரிடம் நீட்டினேன்

'ஒரு வடபழனி' மெல்லிய குரலில் சொன்னேன்.

'வடபழனி அஞ்சு ரூபாம்மா.'

'எங்கிட்ட வேற காசு இல்ல சார். சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்தேன். அவுங்க எல்லோரும் வெளியூர் போயிட்டாங்க. இப்ப என்ன பண்றதுன்னு தெரியல...'

கண்டக்டரின் முகத்தைப் பார்க்கக் கூடத் திராணியில்லாமல், அழுகிற குரலில் சொன்னேன். அவர் என்ன நினைத்தாரோ, சட்டென்று டிக்கெட்டைக் கிழித்து கொடுத்துவிட்டார். வேறு ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

'என்னை அந்தோணியார் கோயிலுக்கு அருகே பார்த்தபோதே, என் உடம்பு வேண்டும் என்று இவன் சொல்லியிருந்தால், நான் இவ்வளவு தூரம் வந்திருக்கமாட்டேன்' என்று தான் ஏமாற்றப் பட்டதை மனக் குமுறலொடு நம்மிடம் கொட்டுகிறார்.

'ஆண்களின் உலகம் விசித்திரமான உலகமாக இருக்கிறது. யார் நல்லவன், எவன் கெட்டவன் என்று கண்டுகொள்வது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒருவன் அழைத்துவந்து ஏமாற்றுகிறான், ஒருவன் என் துயரம் சூழ்ந்த முகம் பார்த்து உதவி செய்கிறான்'

இப்படி ஆங்காங்கே கலைவாணியின் அனுபவ நடை; நடைமுறை வாழ்க்கையின் பொய் முகத்தை நம் முன் படம் போட்டு காட்டுகிறது.

இந்த பெண்கள் எங்கேதான் பாதைமாறுகிறார்கள்?

பாலியல் தொழில் செய்யும் பெரும்பாண்மையான பெண்கள், 'காதல்' என்ற சாலையில் பயணம் செய்யும் போதுதான் வழி தவறிவிடுகிறார்கள். அந்த பயணம் அவர்கள் வாழ்வையே சீரழித்துவிடுகிறது. சில சமையங்களில் வாழ்வின் இக்கட்டான சுழ்நிலைகளில் அவர்கள் எடுக்கும் முடிவும் (தவறான) அவர்களை பாழும் கிணற்றில் தள்ளிவிடுகிறது. அந்த கிணறு முழுவதும் வக்கிர புத்திக் கொண்ட, பெண்களை போகப் பொருளாக நினைக்கும் ஆண்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்?.
*********** ******************* **********

பக்கம் 168
விலை : ரூ 80/-
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

வியாழன், பிப்ரவரி 18, 2010

ரூபாய் நோட்டில் கொக்கரிக்கும் ராஜபக்சே!

தமிழர்களின் தாய் நிலத்தைப் பறித்து, உறவுகளை கொன்றொழித்து, குருதி கொப்பளிக்க கொடுங்கோல் ஆட்சி செய்யும் ராஜபக்சே, தனது உருவப் படத்தை இலங்கை ரூபாய் நோட்டில் வெளியீட்டுள்ளான்.

புலிகளுக்கெதிரான முப்பது வருடங்களுக்கு மேலானப் போரில் தற்போதுதான் சிங்கள ராணுவத்தின் கை மேலோங்கியுள்ளது. அதுவும்
இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினரின் உதவியுடன் நடைப்பெற்ற போர் என்பதால், சிங்கள ராணுவத்திற்கு இந்த தற்காலிக வெற்றி கிடைத்துள்ளது. அந்த வெற்றியை கொண்டாட ராஜபக்சேவின் படத்தை 1000 ரூபாய் நோட்டில் வெளியிட்டுள்ளது 'இலங்கை மத்திய வங்கி'.





புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்த தற்காலிக வெற்றியை கொண்டாடும் ராஜபக்சே.


முன் பக்கத்தில் இரு கைகளையும் உயர்த்தியப் படி ராஜபக்சே, அருகில் இலங்கையின் ஒருங்கிணைந்த வரைபடம், அதில் நடுவில் ஒரு கலசமும் நெற்கதிரும் உள்ளன.

ரூபாய் நோட்டின் அடுத்தப் பக்கத்தில் சிங்கள கொடியை ஏந்தியப் படி ராணுவ வீரர்கள், பின்னணியில் கப்பல் மற்றும் விமானப் படைகளின் அணிவகுப்பு என்று ராஜபக்சேவின் விளம்பர சுவரொட்டியைப் போன்று உள்ளது 1000 ரூபாய் நோட்டு.

தமிழர்களுக்கெதிராக நடைப் பெற்ற போரை முன்னின்று நடத்திய இருவரில் ஒருவன் (பொன்சேகா) சிறையில் உள்ளான். இன்னோருவன் (ராஜபக்சே) வெளியில் உள்ளான். இருவருக்குமே இயற்கை மரணம் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

எந்த ஒரு விடுதலைப் போரும் இறுதி வெற்றி வரும் வரை போராட்டத்தை நிறுத்தியதில்லை. உலகில் நடைப்பெற்ற பெரும்பாலான விடுதலைப் போராட்டங்களுக்கு தமதமாகத்தான் நீதி கிடைத்துள்ளது. தமிழன விடுதலைப் போரும் அப்படித்தான். இந்த தோல்வியும் தற்காலிகமானதுதான்.

உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் சுதந்திரமான 'தமிழ் ஈழம்' பிறக்கும் என்பது உறுதி. அதுவரை தமிழ் ஈழ சுந்திரப் போராட்டம் 'நீறுபூத்த நெறுப்பாய்' கணன்றுக் கொண்டு இருக்கட்டும்'

வெற்றி நமதே...

ஞாயிறு, பிப்ரவரி 14, 2010

இந்திரா காந்தி கொலையாளிகளுக்கு 'தியாகிகள்' பட்டம்.

இந்திரா காந்தியை கொலை செய்த சீக்கிய கொலையாளிகள் நியூசிலாந்து நாட்டில் கவுரவிக்கப்பட்டனர்.


1984 ல் பொற்கோவிலில் நுழைந்த இந்தியப் படை 'ஆப்பரேஷன் புளு ஸ்டார்' என்ற பெயரில் சீக்கியர் மீது தாக்குதல் நடத்தியதால், சினம் கொண்ட சீக்கிய அமைப்புகள் இந்திரா காந்தியை கொலை செய்தனர்.

இந்திய முன்னால் பிரதமர் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்களாக இருந்த பீந்த் சிங், சத்வந்த் சிங் இருவரும் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அவர்களை மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். கொலை சதியில் ஈடுபட்ட பாதுகாவலர் சேகர் சிங் மட்டும் உயிருடன் பிடிபட்டார். அவரும் விசாரனைக்குப் பிறகு தூக்கில் போடப்பட்டார்.

இந்த 3 பேரையும் நியூசிலாந்து நாட்டில் மனுகாவ் என்ற இடத்தில் வசிக்கும் சீக்கியர்கள் இந்திராவை கொன்றவர்களை தியாகிகளாக சித்தரித்து கொளரவித்தனர். அங்கு உள்ள சீக்கியர் கோவிலில் அவர்கள் உருவப்படங்கள் வைக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன.

இந்த சம்பவம் அங்கு உள்ள மற்ற இந்தியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இது பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆக்லாந்தில் உள்ள சீக்கியர் கோவில் நிர்வாகிகள், இந்திராவை கொன்றவர்கள் மதத்துக்காக தங்கள் இன்னுயிரை விட்டுள்ளனர். அவர்களை தியாகிகளாக நினவு கூர்ந்து உள்ளோம் என்று விளக்கம் அளித்தனர்.

இலங்கையில் இந்திய அமைதிப் படை, தமிழனை கொன்று தமிழச்சியை கர்ப்பழித்து ஆடிய ருத்ரதாண்டவம் நாம் அறியாததல்ல. இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படையில் மருந்துக்குக் கூட தமிழன் இல்லை. அதுதான் உண்மையும் கூட... அப்படி ஒரு தமிழன அழிப்புப் போரை இலங்கையில் நடத்தியது இந்திய அமைதிப் படை. அதன் மறு வினைதான் 'ராஜீவ் காந்தி படுகொலை'.

இந்திராவை கொன்றவர்கள் தியாகிகள் என்றால், ராஜீவை கொன்றவர்களும் தியாகிகள்தானே?


ராஜீவ் கொலை தொடர்பான நூல்:

ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தது யார்?
-இ.அன்னபாண்டியன்
தமிழம்மா பதிப்பகம்
59, வினாயகபுரம் முதல் தெரு, அரும்பாக்கம், சென்னை -106

வெள்ளி, பிப்ரவரி 05, 2010

கடிதங்களின் பிணங்கள்!



  • கடிதங்களின் பிணங்கள் !

    மிக நீண்டதொரு
    இரவு

    அதன்
    வெளிச்சங்கள்
    இருட்டினுல் அமிழ்ந்து
    அழுகையை வெளியிட்டன...

    இரவின் யாருமற்ற
    தெருவெளியில்
    குப்பைத் தொட்டிக்கருகில்
    அழுகிய பிணங்களாய்
    கடிதங்கள் இறைந்து கிடக்கின்றன.

    தனிமையின்
    இருக்கத்தின்...
    சுவர்களெங்கும்
    இரத்தச் சிதறல்கள்
    எழுத்துகளாய்
    சிதறியிருக்கின்றன

    காடா விளக்கின்
    வெளிச்சத்தில்-இம்முறை
    அவன் வெளியே
    நின்றிருந்தான்

    அவன்
    வருவதற்குள்...

    கைமணிக்கட்டின்
    வழிவந்த குருதி...

    இம்முறை
    அவன் கால்களை
    நனைக்கும்,

    காற்றின் அலைதலில்
    பிணவாடை
    இன்று அதிகம்தான்.

    -தோழன் மபா

செவ்வாய், பிப்ரவரி 02, 2010

'பாட்சுலர் பாரடைஸில்' இனி நீங்கள் அரை டிராயரோடு சுற்ற முடியாது?


தெருவுக்கு தெரு மேன்ஷன், திரும்பிய பக்கமெல்லாம் மெஸ்ஸுகள், அரை ட்ராயரோடு இரவு முழுவதும் அலையும் இளைஞர்கள் என்று எப்போதும் திருவிழா முகம் காட்டும் திருவல்லிகேணியும் அதன் சார்பு பகுதியான அண்ணாசாலையும் தனது தனித்தண்மையை இழக்கப் போகும் நேரம் வந்துவிட்டது.

சென்னையின் மையப் பகுதியான அண்ணா சாலையும் (அண்ணாசிலை)திருவல்லிக்கேணியும்,சென்னைக்கு வேலை தேடி வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நுழைவு வாயில் என்றால் அது மிகையாகாது.

ஆம்! இளைஞர்களின் கனவு பிரதேசத்தை கலைக்க வருகிறது ஒமந்தூரார் தோட்டத்தில் அமையவுள்ள புதிய 'தமிழக சட்டமன்றக் கட்டிடம்'.

புதிய சட்டமன்ற கட்டிடத்தின் மாதிரி தோற்றம்.



இன்று தமிழகத்தின் பல பகுதிகளிலுமிருந்து சென்னையில் காலுன்றி இருக்கும் லட்சக் கணக்கான தமிழர்கள் திருவல்லிக்'கேணி'யை தாண்டாமல் வந்திருக்க முடியாது.

குறுகலான திரிவல்லிகேணி தெரு...

எல்லிஸ் ரோடு, மவுண்ட் ரோடில் உள்ள அண்ணா,தேவி, சாந்தி தியேட்டர் வளாகங்கள் கெயிட்டி - காசினோ தியேட்டர் உள்ள பிளாக்கர்ஸ் ரோடு, பெல்ஸ் ரோடு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை என்று சின்னதும் பெரிதுமாய் உணவு விடுதிகள்,மதுபான விடுதிகள் என்று இளைஞர்களின் உல்லாசபுரியாக (?) திகழ்கிறது திருவல்லிகேணியும், அண்ணாசாலையும். ('ஙே'.... னு முழிக்காதிங்க. அந்த.... உல்லாசபுரி இல்லை! (சற்றே ராஜேந்திரகுமார் நடை!!)


அண்ணா சாலையில் அண்ணா சிலை சந்திப்பு...

சேப்பாக்காம் கிரிக்கேட் ஸ்டேடியம் பக்கத்தில் நாக்கை சப்புக் கொட்ட வைக்கும் நாயர் மெஸ், அக்பர் சாஹிப் சாலையில் "வாங்க சார்... யொல்லோ டோக்கன்..." என்று நம்மை கியூவில் நிற்கவைத்து நல்லதொரு (வாய்ப்புக் கிடைத்தால் சாப்பிட்டு பாருங்க) சாப்பாடு போடும் 'காசி விநாயகா மெஸ்' திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் நம்மை சாம்பார் இட்லியில் குளிப்பாட்டும் 'ரத்னா கேப்', இரவு நேரத்தில் எல்லிஸ் ரோட்டோரத்தில் இருக்கும் இட்லி கடை அப்புறம் இருக்கவே இருக்கு மவுண்ட்ரோட்டில் புகழ்பெற்ற புகாரி, சங்கம் ஹோட்டல்கள் என்று மெட்ராஸின் தனித்தன்மையான அடையாளங்கள் எல்லாம் இனி என்ன ஆகும் என்று தெரியவில்லை?



இன்னிலையில் தமிழ அரசு கட்டிவரும் புதிய தலைமைசெயலகத்தால் அந்த பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் இப்போதே கலக்கத்தில் உள்ளனர். தமிழக அரசு புதிய சட்டமன்றக் கட்டிடத்தை ஒமந்தூரார் தோட்டத்தில் 1லட்சத்தி 60 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமாய் கட்டிவருகிறது . ஜெர்மனியை சேர்ந்த ஜி.எம்.பி என்ற சர்வதேச கட்டுமாண நிறுவனத்தினர் கடந்த ஆறு மாதமாய் மகா சுறு சுறுப்புடன் கட்டி வருகிறார்கள். வரும் மார்ச் 13-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கிறார். அதற்குள்ளாகவே இந்த பகுதி காவல் துறையின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

'ஊரிலிருந்து உங்க மாமாவோ, சித்தப்பாவோ வேலை விஷயமா மெட்ராஸ் போறேன்னுட்டு வெள்ளைச் சட்டையப் போட்டுக்கிட்டு பஸ் ஏர்னார்னா நேரா இங்குவந்துதான் ரூம் போடுவார்'. இனி அதெல்லாம் முடியாது. "இங்கு 'ஃபுளோட்டிங் பாப்புலேஷன்' அதிகம். முன்புபோல் சுதந்திரமாக வந்து இங்கு யாரும் தங்கமுடியாது... " என்கின்றனர் லாட்ஜ் உரிமையாளர்கள்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தின் சின்னமான செயிண்ட் ஜார்ஜ் கோட்டை 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இக் கோட்டை வருகிறது. இது நாள்வரையில் இங்கு வாடகை குடுத்துக் கொண்டு, இயங்கி வந்த தமிழக அரசு, இனி சொந்த கட்டிடத்தில் இயங்கப்போகிறது.

புதிதாய் அமையவிருக்கும் தலைமை செயலகத்தைச் சுற்றி, நிறைய வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் குடியிருப்புகளும் உள்ளன. இனி அந்த குடியிருப்பு வாசிகளுக்கும் பிரச்சனைதான். அதோடு பலரும் இப் பகுதியில் புதிதாய் இடமோ, கட்டிடமோ வாங்க தயங்குகிறார்கள். சட்டமன்றக் கட்டிடம் இங்கு வருவதே அதற்கு காரணம்.

வீட்டை விட்டு சென்னையில் தங்கி வேலைபார்க்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இங்குதான் குறைந்த வாடகையில் ரூம்கள் கிடைக்கின்றன. இருவர் - மூவராய் சேர்ந்து அறையை பகிர்ந்துக் கொள்வதால் இங்கு மாதவாடகை மிக குறைவாகவே இருக்கும்.

பாதுகாப்பு என்ற போர்வையில் காவல் துறையினர் இவர்களது சுதந்திரத்தில் கைவைப்பார்கள். இங்கு உள்ள மேன்ஷன் மற்றும் லாட்ஜுகளில் யாரெல்லாம் தங்கி இருக்கிறார்கள், புதியதாக யார் வருகிறார்கள் என்று, D1 காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும். அதோடு இப்பகுதியில் புதியதாக லாட்ஜூகளோ மேன்ஷனோ (எந்த ஒரு கட்டிடமும்) கட்டக்கூடாது, என்று அடுக்கடுக்காய் பாதுகாப்பு என்ற போர்வையில் கிடிக்கிப்பிடி போட்டு வருகிறது தமிழக அரசு.

இரவு 8 மணிக்கு மேல் யாரும் நடமாடக் கூடாது, சட்டசபை நடைபெறும் காலங்களில் இந்த பகுதிகளில் உள்ள முக்கியச் சாலைகளிலும், உள் வட்டச் சாலைகளிலும் நடமாடத் தடை என்று காவல் துறையினரின் பிடி இருக இருக... 'பாட்சுலர் பாரடைஸிலிருந்து' இளைஞர்பட்டாளம் பறந்து போகும்.

அப்போது 'டிரிப்லிக்கேண்' வீதிகளில் அந்த இளைஞர்கள் விட்டுச் சென்ற கனவுகளும், சிரிப்பொலியும்,சுதந்திரமும் வீதியெங்கும் கேட்பாரற்று இறைந்து கிடக்கும்!.













வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...